ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - TPV3
இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
வாசிக்க:
மார்கழித்திங்கள் மதி நிறைந்த
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்
திருப்பாவையின் மூன்றாம் பாடல் உத்தமனைப் பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வங்களைப் பற்றிப் பேசுகிறது!
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!
"வாமனாவதாரத்தில் மஹாபலியிடம் மூன்றடி மண்ணை இரந்து பெற்று, விஸ்வரூபமெடுத்து, மூன்று உலகங்களையும் தன் திருப்பாதங்களால் அளந்த புருஷோத்தமனுடைய நாமத்தைப்போற்றிப் பாடி, பாவை நோன்புக்கு வேண்டி அதிகாலை நாங்கள் நீராடினால், பிணி, பஞ்சம் போன்ற தீங்கினால் நலிவுறாமல், நாடு முழுவதும் மும்மாரி மழை பெய்திடும். அதனால் செழித்து வளர்ந்த சிவந்த நெற்பயிர்களுக்கு நடுவே கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும். அங்குள்ள நீலவண்ணக் குவளை மலர்களில் புள்ளி வண்டுகள் உறங்கும். வள்ளல் குணம் கொண்ட பசுக்கள் பாலை சிறிதளவும் தேக்கிக் கொள்ளாமல், கறப்பவரின் கை தங்கள் பெருத்த மடியில் பட்ட மாத்திரத்திலேயே பாலைக் குடம் நிறைய சுரக்கும். இங்கனம், அழியாத செல்வம் எங்கும் நிறைந்து காணப்பெறும்."
பாசுர விசேஷம்:


ஆண்டாள் என்ற கவிதாயினி இயற்கையை ஆராதிக்கும் அழகு,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
இப்பாசுரத்தில் வெளிப்படுவதைக் காணலாம்! இயற்கையோடு இயைந்து வாழ்தலே மாந்தர்க்கு நன்மை பயக்கும், இயற்கைச் செல்வம் பேணப்பட வேண்டிய அவசியம் ஆகிய அறிவியல் செய்திகளை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சிறு பெண் அருமையாகக் கூறிச் சென்று விட்டாள்.
பாசுர உள்ளுரை:
1. ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில், "உத்தமன் பேர் பாடி" என்று கூறுவது, பெருமாளின் புகழைப் பாடுவதை விட, அவனது திருநாமத்தைப் (அஷ்டாட்சர மந்திரம்) பாடுதல் தான் சிறந்தது என்ற உள்ளர்த்தத்தை உடையது!
2. முதல் பாசுரத்தில், அஷ்டாட்சர மந்திரத்தையும், இரண்டாவது பாசுரத்தில் த்வய மந்திரத்தையும் கொண்டாடிய ஆண்டாள், இம்மூன்றாம் பாசுரத்தில், கீதாசார்யனின் சரம சுலோகத்தின் (மாமேகம் சரணம் வ்ரஜ - மோக்ஷயிஷ்யாமி மாசுச ஹ) செய்தியை முன்னிறுத்துகிறார்.
இந்த மூன்றையும் கைக் கொண்டாலே, பரமனை அனுபவிக்கவும்,மோட்ச சித்தியைப் பெறவும் அடியவர் பாத்திரமாகிறார்.
அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் ஆகிய மூன்றும் முறையே தாரகம், போக்யம், போஷகம் என்பதாகச் சொல்லலாம். சரீர நோக்கில் பார்க்கையில்,
தாரகம் - உணவு
போக்யம் - பால், நெய்
போஷகம் - வெற்றிலை, சந்தனம் (தாம்பூலம்)
ஆக, அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் என்ற மூன்று மட்டுமே அடியாரின் ஆத்மசுத்திக்கு போதுமானவை; பரமனின் கல்யாண குணங்களை அனுபவிப்பதற்கு, மோட்ச சித்திக்கும் ஆதாரமானவை. ஆக,கர்ம ஞான யோகங்களைக் காட்டிலும், பக்தி யோகமே சிறந்ததாக நாச்சியார் குறிப்பிலுணர்த்துகிறார்.
இன்னும் சற்று எளிமையாக சொல்ல வேண்டுமானால், முதல் பாசுரத்தில், கோபியர்களை விரதத்திற்கு அழைப்பதாகவும், இரண்டாவதில், விரதத்தின் போது செய்யத்தக்க / தகாதவற்றை எடுத்துரைப்பதாகவும், இந்த மூன்றாவது பாசுரத்தில், விரதத்தின் நற்பலன்களை சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
3. பாபங்கள் அணுக முடியாதவன் பரமன் என்பதால், "உத்தமன்" என்று பாசுரத்தில் போற்றப்பட்டுள்ளார்!
4. 'சாற்றி நீராடினால்' என்பது சரணாகதி உபதேசத்தை உட்பொருளாகக் குறிக்கிறது.
5. 'மும்மாரி' என்பது மூன்று வகைப்பட்ட பகவத் காரியங்கள் வாயிலாக, நோன்பின் சரணாகதிப் பலனை பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது,
அ) ஆச்சார்ய உபதேசம்
ஆ) திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல்
இ) திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனை வழிபடுதல்
6. "ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள" --- செந்நெல் வயல்களில் துள்ளி விளையாடும் மீன்கள், தங்கள் உபதேசங்கள் பலனளிப்பதைக் கண்டு மகிழ்வுறும் ஆச்சாரியர்களை உட்பொருளாகக் குறிக்கிறது.
7. "பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப" என்பதில் சுட்டப்படும் வண்டு, அடியவர் நெஞ்சத்தில் (யோக நித்திரையில்) உறைந்திருக்கும் வைகுந்தப் பெருமானைக் குறிக்கிறது.
8. "தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க" என்பது ஆச்சார்யனின் வாத்சல்யத்தால் ஈர்க்கப்பட்ட சீடர்களை உட்பொருளாகக் கொண்டுள்ளது.
9. "வள்ளல் பெரும்பசுக்கள்" தயாள குணம் உடைய, பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஆச்சார்யர்களைக் குறிக்கிறது.

10. "நீங்காத செல்வம்" என்பது (திருமகளின் பரிந்துரையின் பேரில், அடியவர்க்கு பெருமாள் அருளும்!) பூவுலகில் வாழும் காலத்தில், குன்றாத ஞானத்தையும், அதன் பலனால் கிட்டிய மோட்ச சித்தியையும் குறிக்கிறது. ஏனெனில், மற்ற எல்லா செல்வங்களும் நீங்கக் கூடிய செல்வங்கள் ஆதலால் !
என்றென்றும் அன்புடன்
பாலா
























